ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கு மிகவும் பொதுவாக அறியப்படும் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் ஆகும்.1517
50 முதல் 74 வரை வயதுடைய பெண்களை 2 வருடங்களுக்கு ஒருமுறை மார்பக ஆய்வுச் சோதனை செய்துகொள்ளுமாறு நியூ சவுத் வேல்ஸ் மார்பக ஆய்வுச் சோதனை மையம் (BreastScreen NSW) அழைக்கிறது.
மார்பக ஆய்வுச் சோதனை என்றால் என்ன?
'மேமோகிராம்' (mammogram) என்றும் அழைக்கப்படும் மார்பக ஆய்வுச் சோதனையானது மார்பகங்களை 'எக்ஸ்-ரே' எடுப்பதாகும். நீங்கள் ஒரு மாற்றத்தைக் கவனிப்பதற்கு முன்பாகவே அல்லது ஒரு கட்டி இருப்பதை உணர்வதற்கு முன்பாகவே, ஒரு அரிசி மணி அளவான சிறிய புற்றுநோய்களையும் இதன்மூலம் கண்டறிய முடியும்.
மார்பகப் புற்றுநோய்க்குச் சிகிச்சையளிப்பதற்கான சிறந்த நேரம் அது இன்னும் மிகச் சிறியதாக இருக்கும்போதுதான். மார்பகப் புற்றுநோய் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியப்பட்டால், சிகிச்சையளிப்பது மிகவும் எளிதானது. பெரும்பாலான பெண்கள் குணமடைந்து தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கிறார்கள்.
அனைத்துக் கலாச்சாரப் பின்னணி கொண்ட பெண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வரலாம். நீங்கள் நன்றாயிருப்பதைப் போன்ற தோற்றமளிக்கலாம், மேலும் நன்றாக இருப்பதாகவம் உணரலாம், ஆனால் எந்தவித நோயறிகுறிகளும் இல்லாமல் உங்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரக்கூடும் (நோய்)
மார்பக ஆய்வுச் சோதனை ஏன் அவசியம்?
எப்போது ஆய்வுச் சோதனை செய்வது
- 50 முதல் 74 வயது வரை இரு வருடங்களுக்கு ஒரு முறை.
- உங்களுக்கு மருத்துவரின் பரிந்துரை தேவையில்லை.
- 40-49 வயதுடைய பெண்கள் மற்றும் 74 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் ஆய்வுச் சோதனை செய்யலாம். தயவுசெய்து முதலில் உங்கள் மருத்துவரிடம் பேசவும்.
மார்பக ஆய்வுச் சோதனைக்கு எவ்வாறு முன்பதிவு செய்வது
முன்பதிவு செய்ய 13 20 50 என்ற எண்ணில் அழைக்கவும் அல்லது முன்பதிவு செய்ய மொழி ஆதரவை நீங்கள் விரும்பினால், 13 14 50 என்ற எண்ணில் மொழிபெயர்த்தல் மற்றும் மொழிபெயர்த்துரைத்தல் சேவையை (Translating and Interpreting Service) அழைக்கவும்.
உங்கள் சந்திப்பு ஏற்பாட்டில் மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் தேவைப்பட்டால், நீங்கள் முன்பதிவு செய்யும் போது நியூ சவுத் வேல்ஸ் மார்பக ஆய்வுச் சோதனை மையத்துக்குத் (BreastScreen NSW) தெரியப்படுத்தவும். உங்கள் சந்திப்பு ஏற்பாட்டில் குடும்பத்தினரோ அல்லது நண்பர்களோ மொழிபெயர்த்துரைக்க முடியாது.
ஒருவருக்கொருவர் ஆதரவாக, நீங்கள் மற்ற பெண்களுடன் வர விரும்பினால், நாங்கள் குழு முன்பதிவு செய்யமுடியும்.
நியூ சவுத் வேல்ஸில் 250 -க்கும் மேற்பட்ட மருத்துவ நிலையங்கள் மற்றும் நடமாடும் வாகனங்களை நியூ சவுத் வேல்ஸ் மார்பக ஆய்வுச் சோதனை மையம் (BreastScreen NSW) கொண்டுள்ளது.
உங்கள் சோதனை முடிவுகளின் நகலை உங்கள் மருத்துவர்கள் பெற விரும்பினால், உங்கள் சந்திப்பு ஏற்பாட்டின்போது அவர்களின் தொடர்பு விவரங்களைக் கொண்டு வரவும்.
உங்கள் சந்திப்பு ஏற்பாடு
- இடுப்புக்கு மேல் அணிந்திருக்கும் உங்கள் ஆடைகளை அகற்ற வேண்டியிருக்கும் என்பதால், இரு துண்டுகளான ஆடைகளை அணிந்து வரவும்.
- உங்கள் சந்திப்பு ஏற்பாட்டு நாளில் உங்கள் உடலில் 'பவுடர்', வாசனை திரவியம் அல்லது களிம்புகளைப் (cream) பயன்படுத்த வேண்டாம், எனென்றால் அவை உங்கள் 'எக்ஸ்-ரே'யைப் பாதிக்கக்கூடும்.
- ஒரு பெண் ஊடுகதிர்ப் படப் பதிவாளர் (radiographer) ('எக்ஸ்-ரே' எடுக்கும் சுகாதாரப் பணியாளர்) ஆடைகளை நீக்குவதற்கு உங்களை ஒரு தனி அறைக்கு அழைத்துச் செல்வார். அதன்பின் உங்கள் ஒவ்வொரு மார்பகத்தின் 'எக்ஸ்-ரே'யும் எடுக்கப்படும்.
- 'எக்ஸ்-ரே'க்களை எடுப்பது விரைவானது. மார்பகங்கள் அழுத்தப்படும் போது சில பெண்களுக்குச் சங்கடமாக இருக்கலாம். நீங்கள் எந்த நேரத்திலும் கேள்விகளைக் கேட்கலாம், அத்துடன் மார்பக ஆய்வுச் சோதனையையும் நிறுத்தலாம்.
- உங்களது கடைசி 'மேமோகிராம்' (mammogram) நியூ சவுத் வேல்ஸ் மார்பக ஆய்வுச் சோதனை மையத்தில் (BreastScreen NSW) இல்லையென்றால், கடந்த மார்பக 'எக்ஸ்-ரே'க்களைத் தயவுசெய்து உங்களுடன் எடுத்துச் செல்லவும்.
பின்வரும் சூழ்நிலைகளில் நீங்கள் இருந்தால், தயவுசெய்து எங்கள் ஊழியர்களிடம் சொல்லவும்:
- கர்ப்பமாக இருந்தால், அல்லது தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தால்
- மார்பக உள்வைப்புகள் இருந்தால் (breast implants)
- செயற்கை இதய மின்னியக்கி (pacemaker) பொருத்தப்பட்டிருந்தால்
- நடமாட்டம், முதுகு அல்லது தோள்பட்டை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தால்.
நியூ சவுத் வேல்ஸ் மார்பக ஆய்வுச் சோதனை மையத்தில் (BreastScreen NSW) மார்பக ஆய்வுச் சோதனை செய்வது நோயறிகுறிகள் இல்லாத பெண்களுக்குத்தான். உங்கள் மார்பகங்களில் கட்டி, வலி அல்லது முலைக்காம்பில் கசிவு போன்ற ஏதேனும் மாற்றங்களை நீங்கள் கவனிக்க நேர்ந்தால், முடிந்தவரை கூடியவிரைவில் உங்கள் மருத்துவரை அணுகவும்.